எட்டயபுரத்தில் சாலையில் நடந்த ஆட்டுச்சந்தை 
உள்ளூர் செய்திகள்

எட்டயபுரத்தில் சாலையில் நடந்த ஆட்டுச்சந்தை

எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கால்நடை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால் இன்று சாலையில் வைத்து ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

மாலை மலர்

எட்டயபுரம்:

 தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரத்தில் உள்ள  ஆட்டுச்சந்தை தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் பிரசித்தி பெற்றது. 

 வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை,  தேனி,  ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி என  பல்வேறு  மாவட்டங்களில்  ஆடுகளை வளர்ப்போர் தங்கள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 

தற்போது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல ஆயிரக்கணக்கான ஆடுகளுடன் விவசாயிகள் வந்தனர். 

அப்போது அங்கு வந்த போலீசார் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால் இங்கு யாரும் நிற்ககூடாது என அவர்களை வெளியேற்றினர்.

 தொடர்ந்து இன்று காலை மீண்டும் அவர்கள் சந்தையில் திரண்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தொற்று பரவல் உள்ளதால் ஆட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லை என கூறி அனைவரையும் வெளியேற்றினர். 

இதைத்தொடர்ந்து எட்டயபுரம்&நடுவிற்பட்டி மெயின்ரோட்டில் திரண்டு வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனையில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.  

ஆடுகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. மதியம் வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆடுகள் விற்பனை யானது. குட்டிஆடுகள் முதல் பெரிய ஆடுகள் வரை எடைகளுக்கு ஏற்ப ரூ. 5 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 

 ஏராளமானவர்கள் சாலையில் திரண்டு வியாபாரத்தில் ஈடுபட்டதால்   அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.