மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி அவசர கூட்டம் நடந்த போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

சொத்து வரி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை-தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

சொத்து வரி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி அவரச கூட்டம் நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்துக்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர், ஆதரவு சுயேச்சை கவுன்-சிலர் ஒருவர் ஆக மொத்தம் 7 கவுன்சிலர்களும் கருப்பு நிற சட்டை அணிந்து வந்தனர். பின்னர் அ.தி.மு.க.வினர் சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினர். 

தொடர்ந்து சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யப்பட வேண்டும், 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்வு, 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்வு, 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு, வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 100 சதவீதம் உயர்வு, 

தொழிற்சாலை மற்றும் சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 75 சதவீதம் உயர்வு, காலிமனை வரிவிதிப்புக்கு 1 சதுர அடி நிலத்துக்கு தற்போது உள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயர்வு செய்து காலிமனை வரி பொது சீராய்வு செய்யப்பட வேண்டும். 

கட்டிடத்தின் பரப்பளவுக்கு 2 மடங்குக்கு மேல் உள்ள காலி இடத்துக்கு சொத்து வரியுடன் சேர்த்து காலிமனை வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி, காலிமனை வரி உயர்வு சொத்துவரி சீராய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சொத்து வரியில் நிலை மாற்றம் செய்து வரி உயர்த்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் அதனை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதே போன்று மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, சொத்துவரி கடந்த 2008-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இதில் பல இடங்களில் வணிக கட்டிடங்கள் வந்து உள்ளன.அதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

பெரும்பாலும் பழைய நிலையிலேயே தொடர்கிறது. பின்தங்கிய பகுதியில் பழைய நடைமுறையே நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.