மிட்டாய் கடையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் இன்று அதிகாலை மிட்டாய் கடையில் திடீர் தீ விபத்து

தூத்துக்குடி மிட்டாய் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தயாரிப்பு பொருட்கள் சாம்பலானது.

தூத்துக்குடி:-

தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவசண்முகசுந்தரம். இவர் அங்குள்ள பாளையங்கோட்டை சாலை  வி.வி.டி. சிக்னல் அருகே மிட்டாய் கடை நடத்தி வருகிறார். சிவசண்முகசுந்தரம் நேற்று வழக்கம் போல்  வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி சென்று விட்டார். 

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென அந்த கடையில் இருந்து புகை வருவது தெரிந்ததும் அருகிலுள்ள டீக்கடைக்காரர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து கோட்ட தீயணைப்பு அலுவலர் சகாயராஜ் மற்றும் கோட்ட உதவி  அலுவலர் முருகையா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து கடைக்கு உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் கடையின்  ஷட்டர்கள் திறக்கப்பட்ட போது கடை முழுவதுமாக தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 2 மணி நேரம் போராடி கடை முழுவதும் பரவியிருந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர். 

 எனினும்   நிலக்கடலை,  ஸ்வீட், பலகாரங்கள், அதன் தயாரிப்புக்கான பொருட்கள் என அனைத்தும் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தீயணைப்புத் துறையினரின் உடனடி நடவடிக்கையால் தீ அருகிலுள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இது குறித்து தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.