தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் மாரியப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தூத்துக்குடி புறவழிச்சாலை சாலை அருகே உள்ள 2 பிரபல ஓட்டல்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு ஓட்டலில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகமாக காணப்பட்டதுடன் சுமார் 240 கிலோ அயோடின் கலக்காத உப்பு கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் அருகே மற்றொரு ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது ஓட்டல் பின்புறத்திலேயே தேங்கி பொதுமக்களின் பொதுசுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்த கழிவுநீர் இயக்கத்திற்கு காரணமான ஓட்டலும் ஆய்வு செய்யப்பட்டு அங்கும் அதிக சுகாதாரக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அங்கும் 50 கிலோ அயோடின் கலக்காத உப்பு கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கி வந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதனால் அந்த ஓட்டல் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப் பட்டது. இதுதவிர டூவிபுரத்தில் உள்ள பேக்கரியில் உணவு குழுவினர் சோதனை செய்தனர்.
அங்கும் அயோடின் கலக்காத உப்பு 44 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.