கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்க வேண்டும்- தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4  மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ. 6ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகை யாக வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ்  78 ஆயிரத்து 844 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து விவசாயி களுக்கு 10 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. மத்திய அரசு தற்போது திட்டநிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

 இதுவரை வங்கி கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். தற்போது விவசாயிகள் 11-வது தவணை (1.4.22 முதல் 31.7.2022 வரை) தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது அவசியமாகும்.

தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கி கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்துடன் சென்று இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.