கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

உடன்குடியில் இருந்து சென்னைக்கு அதிவிரைவு பஸ்களை இயக்க கோரிக்கை

உடன்குடியில் இருந்து ஊட்டி, சென்னை, ஈரோடுக்கு அரசு அதிவிரைவு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

உடன்குடி:

உடன்குடியில் இருந்து தினசரி மாலை 5.20-க்கு தடம் 632 என்ற அரசு விரைவு பஸ் உடன்குடி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு பல ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இந்த பஸ் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முன்பு இயக்கப்பட்டது. 

இதைபோல உடன்குடியில் இருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாசரேத், நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னை சென்ற தடம் 193 என்ற அரசு விரைவு பஸ் சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்தது. 

உடன்குடிக்கு காலையில் வரும் இருபஸ்களும் மாலைவரை உடன்குடியில் நின்று குறிபிட்ட நேரப்படி சென்னைக்கும், ஊட்டிக்கும் புறப்பட்டு சென்றது. இந்த இரு பஸ்களையும் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாற்றினர். 

இதனால் காலையில் உடன்குடிக்கு வரும் இரு பஸ்களும் திருச்செந்தூர் சென்று விட்டு மாலையில் குறிப்பிட்ட நேரப்படி புறப்பட்டு உடன்குடிக்கு வந்து ஊட்டி, சென்னை சென்றது. தற்போது சுமார் 6 மாதங்களாக இந்த இரு பஸ்களும் உடன்குடிக்கு வராமல் திருச்செந்தூரில் இருந்து ஊட்டி மற்றும் சென்னைக்கு சென்று விடுகிறது.

இதே போல தினசரி மாலை 5.15-க்கு உடன்குடி யில் இருந்து ஈரோடு புறப்பட்ட தடம் 624 என்ற அரசு விரைவு பஸ் சாத்தான்குளம், நாசரேத், நெல்லை, மதுரை வழியாக ஈரோடு சென்றது. 

இந்த பஸ் நெல்லை பஸ் டெப்போ மூலம் இயக்கப்பட்டது.  கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த அரசு பஸ் இப்போது உடன்குடிக்கு வருவதே இல்லை. இப்படி ஒன்று ஒன்றாக 3 விரைவு அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டது.

உடன்குடி சுற்றுப்புற பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த 3 பஸ்களையும் நம்பி பயணம் செய்து வந்தனர். தற்போது இந்த 3 அரசு பஸ்கள் இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். 

இந்த 3அரசு பஸ்களையும் குறிப்பிட்ட நேரப்படி மீண்டும் உடன்குடியில் இருந்து இயக்க வேண்டும் என்று இதைநம்பி பயணம் செய்த பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.