ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் புகாரிஷ் ஷரீபு சபையின் 95-வதுஆண்டு இஸ்லாமிய முப்பெரும் விழா கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினசரி நபிமொழி ஓதப்பட்டு அதற்கான விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக அதிகாலையில் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் தவ்ஹீத் இறைவணக்கம் பாடினார்.
தொடர்ந்து மவுலவீ காஜா முகைதீன் நபிமொழி விளக்க உரை ஆற்றினார். பின்னர் கூட்டுத் தொழுகையின் மகிமை பற்றி மவுலவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் பேசினார். செய்யது அபூ தாஹிர்அறிமுக உரை நிகழ்த்தினார்.
நிறைவாக உலக அமைதியை வேண்டி மாதிஹூல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் மவுலவி ஜெசீமுல் பக்ரி ஆலிம் கூட்டு பிரார்த் தனை நடத்தினார்.இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ் லாமிய மக்கள் பங்கேற்றனர்.
தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன், துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மாலையில் ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் நிறைவாக இன்று நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.