நீர்கருவை மரத்தில் அமர்ந்து இருக்கும் பறவைகளை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே நீர்கருவை மரங்களால் உயிரிழக்கும் பறவைகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்பணிச்செட்டிகுளத்தின் மேல்பகுதியில் பாசன குளம் அமைந்துள்ளது. இங்குள்ள நீர் கருவை மரங்களால் பறவைகள் உயிரிழக்கும் நிலை -ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ளது திருப்பணிச்செட்டிகுளம். இந்த ஊரின் மேல்பகுதியில் பாசன குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுமார் 100 ஏக்கர் பாசன பரப்பு கொண்டது. 

காமராஜர் முதல்வராக இருந்த போது நாட்டுக்கருவை மரங்கள் இந்த குளத்தில் 100-க்கும் மேல் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

அந்த சமயங்களில் வெளி நாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டுப்பறவைகள் என ஏராளமான பறவைகள் இந்த குளத்தில் வந்து தங்கி இனப் பெருக்கம் செய்து சென்றன. 

அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் குளத்தில் இருந்த நாட்டுக் கருவை மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டது. இதனால் அந்த மரத்தில் இருந்து வந்த பறவைகள் அனைத்தும் அருகில் பட்டா நிலத்தில் இருந்த நீர் கருவை மரங்களில் தஞ்சம் புகுந்தது.

தற்போது வரை அந்த குளத்தில் அருகே உள்ள இந்த நீர் கருவை மரங்களில் வருடம் தோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து தங்களது குஞ்சுகளுடன் செல்கின்றன. 

இந்த பகுதியில் உள்ள குளத்திற்கு இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், பாம்புத்தாரா, பெரிய நீர்க்காகம், வக்கா, சாம்பல் நாரை புள்ளிமூக்கு தாரா, நத்தை குத்தி நாரை, நெடலை கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், பவளக்கால் உள்ளான், கருப்பு அரிவாள் மூக்கன் போன்ற உள்நாட்டு பறவைகளும், உள்ளான் வகைகள், ஊசிவால் வாத்து, வெண் புருவ வாத்து, மஞ்சள் வாழாட்டி குருவி என வெளிநாட்டு பறவை இனங்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் 1000--க்கும் மேற்பட்ட பறவைகள் இந்த குளத்தில் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

இதில் மிகவும் பரிதாபமான விஷயம் என்னவென்றால், வருடம் தோறும் இந்த நீர் கருவை மரங்களால் 100--க்கும் மேற்பட்ட பறவைகளும், பறவை குஞ்சுகளும் கருவை மரத்தில் உள்ள முட்செடியில் சிக்கி  உயிரிழந்து வருகிறது.

தினந்தோறும் அந்த பகுதியில் இருந்து பறவைகள் உணவிற்கு சென்று வருவதற்குள் கூட்டில் இருக்கும் குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. மேலும் உணவிற்கு செல்லும் பறவைகளும் இந்த முட்செடியில் சிக்கி உயிரிழந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த திருப்பணி செட்டிகுளம் பகுதியில் தான் ஏராளமான பறவைகள் வந்து தங்கி செல்கின்றன. இதனால் இந்த பகுதி ‘குட்டி கூந்தன்குளம்’ போல விளங்குகிறது.

எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், இந்த குளத்தின் பகுதியில் புதிதாக நாட்டுக்கருவை மரங்கள் மற்றும் மரங்கள் நட்டு பராமரித்து புதிதாக காடுகள் உருவாக்கி வருடம் தோறும் இறக்கும் பறவைகளை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முத்துநகர் இயற்கை பாதுகாப்பு கழக தலைவர் தாமஸ் மதிபாலன் கூறியதாவது:-

 எனக்கு 70 வயது ஆகியது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நான் பார்த்த போது ஏராளமான நாட்டுக்கருவை மரங்கள் இருந்தன. அதில் நமது பகுதியில் இருந்து வரும் பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சுகள் பொறித்து வளரும். 

ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டதால் அருகில் இருந்த நீர்க்கருவை மரத்தில் அனைத்து பறவைகளும் குடியேறியது. 

ஆனால் அந்த மரத்தில் முட்செடிகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் கூட்டில் இருந்து தவறி விழும் குஞ்சுகளும், இறைதேடிச் செல்லும் சில பறவைகளும் இந்த முள்ளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விடுகிறது. எனவே அதனை காப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த சுயம்பு என்பவர் கூறும்போது, எங்கள் பகுதியில் முன்னர் இருந்தே ஏராளமான பறவைகள் வருடம் தோறும் வந்து செல்லும்-. நாங்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்வோம். 

ஆனால் தற்போது நீர்க்கருவை மரங்களில் கூடு கட்டும் பறவைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.