தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் தற்போது கோடை பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிர்கள் வளர்ச்சிப் பருவத்தில் உள்ள சூழ்நிலையில் நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை கல்லூரி விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கிராமங்களில் அட்மா திட்டம் மூலம் முகாம் நடைபெற்றது.
இதில் ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி, ராஜபதி ஊராட்சி மன்ற தலைவர் செவந்தரராஜன், குருகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ஆல்வின் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது உள்ள சூழ்நிலையில் நெற்பயிரில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுவதால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி துருபிடித்த கரையை போன்று காணப்படுகிறது.
இதனை நிவர்த்தி செய்திட மேலுரங்கள் இடும்போது சாம்பல் சத்து உள்ள மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தினை ஏக்கருக்கு 17கிலோ இட வேண்டும். நீரில் கரையக்கூடிய துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 300 கிராம் (விசைத்தெளிப்பான் மூலம் 10 முதல் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்றிற்கு 50 கிராம்) என்ற அளவில் நெற்பயிர்கள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட வயல்களில் நன்கு வடிகால் வசதி ஏற்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர்ப்பாசனம் செய்து ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வட்டார வேளாண் அலுவலர் திருச்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.