எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவர் தனது இளம் வயதில் மாட்டுவண்டி பந்தய வீரராக திகழ்ந்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார்.
பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது சொந்த கிராமமான விருசம்பட்டியில் இருந்து, சென்னைக்கு புலம்பெயர்ந்து அங்கு தன் குடும்பத்தினருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இதனால் இவர் தொடர்ந்து மாட்டுவண்டி பந்தயங்களில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது மகன் முத்துப்பாண்டியின் திருமணத்தை தனது சொந்த கிராமத்தில் நடத்த வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் சொந்த ஊரான விருசம்பட்டி கிராமத்திற்கு வந்து திருமணத்தை நடத்தினார்.
மாட்டுவண்டி பந்தயங்களில் தீராப்பற்றும், பேரார்வமும் கொண்ட ஆறுமுகசாமி, மகனின் திருமணத்தை முன்னிட்டு தனது சொந்த ஊரில், மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பெரிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40-&க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
விருசம்பட்டியில் இருந்து -குரளையம்பட்டி கிராமம் வரை நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பெரிய மாடுகள் சுற்றில் 19 மாட்டு வண்டிகளும், சிறிய மாடுகளுக்கான சுற்றில் 21 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டிவந்த சாரதிகளுக்கும் ஆறுமுகசாமி குடும்பத்தினர் சார்பில், பரிசு தொகையை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். இப்போட்டியை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாட்டு வண்டிப் பந்தய வீரர் ஆறுமுகசாமி கூறுகையில், நான் சிறு வயது முதல் மாட்டுவண்டிப் பந்தயங்களின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவன்.இதனால் பல இடங்களில் நடைபெற்ற போட்டியில் சாரதியாகவும் பின்னோட்டி யாகவும் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளேன்.
தற்போது நாங்கள் குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறோம். அதனால் பாரம்பரிய விளையாட்டை நினைவு கூறும் வகையில் எனது மகனின் திருமணத்தை முன் னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை எனது கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளேன். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என கூறினார்.