சாத்தான்குளம்:
இளைஞர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற வைரஸ் நோய்களின் அச்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசு நேரு யுவகேந்திரா, நம்பிக்கை சேவை மன்றம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி பேய்க்குளம் அருகே உள்ள வடக்கு இளமால்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் இளைஞர் மன்றங்களுக்கான குழு விளையாட்டுப்போட்டியில் கபடி, வாலிபால், கால்பந்து மற்றும் தனிநபர் காண போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் , இளம் பெண்களுக்கான குழு போட்டியில் கயிறு இழுத்தல், கோ - கோ பெண்களுக்கான தனிநபர் போட்டியில் மியூசிக்கல் சேர், பந்து கடத்துதல், ஒற்றைக்கால் ஓட்டம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் கென்னடி கலந்து கொண்டார். பின்னர் வெற்றி பெற்ற இளைஞர் மன்றத்தை சார்ந்த வீரர்களுக்கும்,மகளிர் மன்றத்தை சார்ந்த இளம் பெண்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி, ஸ்ரீ அகத்தியர் லோபமுத்திரை டிரஸ்ட் இயக்குனர் பட்டுவேல்,செயலாளர் பன்னம்பாறை சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா பல்நோக்கு அலுவலர் இசக்கி கருத்துரை வழங்கினார். விளையாட்டு போட்டியின் நடுவராக முருகேசன், சேகர், லிங்கம், தங்க பெருமாள் ஆகியோர் செயல்பட்டனர். இதில் கருங்கடல் கவுன்சிலர் காந்திமதி, சமூக ஆர்வலர் லிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டியில் இளைஞர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள்,இளம் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுமார் 150&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் இளைஞர் மன்ற தலைவர் விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள், மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் நம்பிக்கை சேவை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.