திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகா ஓகைபேரையூர் மற்றும் கர்ணாவூர் கிராமம், பனையனார் வடிகால் வாய்க்கால், அனுமன் கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்குபனையனார் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் முன்னிலையில் கூடுதல் தலைமைசெயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியின் 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் எதிர்வரும் மே-31க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை துர்வாரும் பணிகளை அந்தந்த பகுதியிலுள்ள உழவர் குழுக்களின் கண்காணிப்பு, அவர்களின் ழுமு ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 115 பணிகள் எடுக்கப்பட்டு 1200.56 கி.மீ தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வில் முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவிசெயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள், உழவர் குழுக்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.