தேனி:
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுவுடனான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 6 நகராட்சிகளில் உள்ள 177 வார்டு உறுப்பினர், கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 வார்டுஉறுப்பினர், கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
பறக்கும் படை, முக்கியமாக தேர்தல் நடத்தை விதி முறைகள் முழுமையாக நடைமுறையில் இருக்கும் போது எவ்வித விதி மீறல்கள் இல்லாமல் எவ்வித புகார்களுக்கும் இடம் கொடுக்காமல் நடைமுறைப்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல்களோ, அச்சுறுத்தல்களோ, ஏற்படா வண்ணம், வரக்கூடிய புகார்களுக்கு உடனடியாக சென்று பார்வையிட்டு உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோல் குறிப்பிட்ட ஒரு நபருக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம் வழங்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
பறக்கும் படை வாகனங்கள் தணிக்கையின் போது ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ஆவணங்கள் இல்லாமல் கண்டறியப்பட்ட தொகை மற்றும் அதற்கு மிகையான பொருட்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அருகில் உள்ள கரூவூலகத்தில் செலுத்திடவேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் பொருட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட நபரிடம் உரிய ஒப்புதல் வழங்கிட வேண்டும்.
வேட்பாளர், முகவர் அல்லது அவருடைய ஆதரவாளர்கள் மூலம் ரூ.10 ஆயிரத்துக்கு மேற்படும் சுவரொட்டிகள், தேர்தலுக்கான பொருட்கள், பரிசுபொருட்கள், ஆயுதங்கள், மது பாட்டில்கள் வாகனங்களில் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து நகர்புறத்திற்கு அருகில் உள்ள போலீஸ்நிலையம், கருவூலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் விடுபடாமல் எவ்விததொய்வும் இல்லாமல் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். அன்றாடம் ஒளிப்பதிவு செய்யக்கூடிய குறுந்தகடுகளை சம்மந்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.