கோவை:
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் துர்கா தேவி (வயது 35). ஐ.டி.ஊழியர். இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
எனக்கும், 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார் (44) என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர் பணியில் இல்லை. எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். 2 வருடங்களுக்கு பின்னர் தான் எனது கணவர் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து நான் கேட்ட போது எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது கணவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரிந்தேன். பின்னர் நான் எனது மகனுடன் குன்னூரில் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி என்னை எனது கணவர் செல்போனில் அழைத்து பேசினார். நீ ஆபாச படத்தில் நடித்துள்ளாய், அந்த வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோ உனக்கு வேண்டும் என்றால் கோவை காந்திபுரத்துக்கு வா என்று அழைத்தார்.
அதிர்ச்சியடைந்த நான் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு வைத்து வீடியோவை காண்பிக்குமாறு கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் பொது இடத்தில் வைத்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஆனால் அவரிடம் எந்த வீடியோவும் இல்லை. அவர் வேண்டும் என்றே என்னை ஏதாவது வழக்கில் சிக்க வைப்பதற்காக இந்த செயலை செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் மனைவியை அழைத்து தாக்கிய முன்னாள் போலீஸ்காரர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.