ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அடுத்த தோண்டாராயன் காடு, சவண்டப்பூர் ராஜா பண்ணாடி நோய் வயல் அருகே உள்ள தடப்பலி வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 60 வயது முதல் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதந்து வருவதாக கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
மூதாட்டி குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.