பாபநாசம்:
தமிழக அரசுக்கு, பாபநாசம் வட்டார விவசாயிகள் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் நஞ்சு இல்லாத இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் ஆர்வமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளிடம் அதிக அளவில் தேங்கி உள்ளது. பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வமாக பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பாரம்பரிய நெல், அரிசிக்கான நியாயமான விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வேளாண்துறை அதிகாரிகள் அல்லது உணவு வழங்கல் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அரசு கொள்முதல் செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டத்தில் முக்கியமான நகரங்களில் பாரம்பரிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்குரிய நியாயமான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.