கும்பகோணம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எரவாஞ்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பூங்குடி மூலை கிராமத்தில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இருந்த 1.5 அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன விநாயகர் சிலை கடந்த 2016-ம் ஆண்டு திருட்டு போனது.இதுதொடர்பாக எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் அகிலன் என்கிற தங்கவேல் (வயது25) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இதனிடையே வரசித்தி விநாயகர் கோவில் சிலை திருட்டு வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிலை திருட்டு வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்யும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இயக்குனர் ஜெயந்த்முரளி, காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து கும்பகோணம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் வரசித்தி விநாயகர் கோவில் சிலை திருட்டு வழக்கில் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அகிலன் என்கிற தங்கவேல் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்&இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த அகிலன் என்கிற தங்கவேலுவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் நடந்த மேலும் ஒரு சிலை திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அகிலன் என்கிற தங்கவேலுவை போலீசார் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.