தஞ்சாவூர்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும் , நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் மண்டை ஓடு ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது.
பின்னர் சாலையில் படுத்து கிடந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஷம் எழுப்பியவாறே கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். இதையடுத்த போலீசார் உடனடியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவை பூட்டினர். இதில் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விவசாய சங்க நிர்வாகி ஒருவர் திடீரென ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு மேலும் பதட்டம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுங்கள் என கூறி அனுப்பினர். இருந்தாலும் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.