சுதர்சன சபாவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டினர். 
உள்ளூர் செய்திகள்

ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு கையகப்படுத்திய தஞ்சை மாநகராட்சி

தஞ்சையில் ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தஞ்சை மாநகராட்சி கையகப்படுத்தியது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே 100  ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இயங்கி வந்தது. இந்த சபாவில்  நாடகம் மற்றும்  சொற்பொழிவுகள்  நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சுதர்சன சபா கடந்த காலங்களில்  ராமநாதன் என்பவருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

ஆனால் நாளடைவில் அந்த சுதர்சன சபா வேறு சிலருக்கு உள்வாடகைக்கு விடப்பட்டது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது.  இது குத்தகை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் சரியான பதில் இல்லை. இதற்கிடையே இது தொடர்பாக சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த நிலையில் கோர்ட்டின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்தது . இதையடுத்து இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் காலி செய்யவில்லை.

இதனை தொடர்ந்து இன்று ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட இடத்தை ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன் படி தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தபட்டது.

தண்டோரா போட்டு நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு  போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். 

அதில்  தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த இடத்தில் அத்து மீறி நுழைபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி கையகப்படுத்திய இடத்தின் மதிப்பு தற்போது சுமார் 

ரூ.100 கோடி இருக்கும் என தெரிய வருகிறது.

இதற்கிடையே ஏற்கனவே சுதர்சன சபா வளாகத்தில் மாநகராட்சி அனுமதி இன்றி உள் வாடகைக்கு விடப்பட்டு வேறு சில தனியாரால் கட்டப்பட்ட மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் விற்பனைகடை, பேக்கரி ஆகியவை 

பூட்டி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT