மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா வையச்சேரி, சூலமங்களம் ஊராட்சி பகுதியில் தஞ்சை -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வையச்சேரி, சூலமங்களம் கிராம சாலைக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இது நாள் வரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் நெடுஞ்சாலை துறையினர் எடுக்காத நிலையில் அய்யம்பேட்டை பகுதியில் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கிராமமக்கள் வையச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் பொரக்குடி, புண்ணியநல்லூர், சூலமங்களம், வையச்சேரி கிராம மக்கள் பலர் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர்கள் வனிதா, அழகம்மாள் உள்பட அதிகாரிகள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாற்று வழிசாலை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் பேரில் போரா ட்டத்தைகைவிட்டனர்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சத்தியாசுர்ஜித், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கனகராஜ், பெருமாக்கநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் ராமநாதன், விவசாய சங்க மாவட்ட துணை செயலர் சாமுதரமராஜ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன், வையச்சேரி அசோக் உள்பட கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.