தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் எம்.முபாரக் (வயது 42). இவர் தஞ்சை தலைமை அஞ்சலகத்துக்கு பணபரிவர்த்தனைக்காக வந்திருந்தார்.
அப்போது அஞ்சலக கவுண்டர் ஹாலில் கீழே ரூ.1000 கிடந்தது. உடனடியாக அங்கு இருந்தவர்களிடம் இந்த பணம் உங்களுடையதா? என கேட்டார். அதற்கு அவர்கள் எங்களுடையது இல்லை என்றனர்.
இதையடுத்து அந்த பணத்தை தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாசிடம் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறி உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். முபாரக்கின் இந்த நேர்மையான செயல் அருள்தாஸ் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
இது தொடர்பாக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் விசாரித்தபோது ஒரு ஏழை பெண்ணின் பணம் என்பதும், அவர் அஞ்சலகத்தில் டெபாசிட் செய்ய வரும்போது தவறவிட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் சம்பந்தபட்ட பெண் தலைமை அஞ்சலகத்துக்கு வரவழைக்கப்பட்டு பணம் ஒப்படைக்கப்பட்டது.
கீழே கிடந்த பணத்தை நேர்மையான முறையில் எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய முபாரக்கை கவுரவிக்க அஞ்சலகம் முடிவு செய்தது.
அதன்படி முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் மனிதாபிமான முறையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக சால்வை அணிவித்து முபாரக்கை பாராட்டினார்.