பட்டீஸ்வரம்:
ஆயிரம் ஆண்டுகள் கடந்து மிளிரும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் மட்டுமல்லாமல் சைவ நாயன்மார்கள் மற்றும் வைணவ ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற கோவில்கள் நிறைந்த கும்பகோணம் மாநகரில் அமையப் பெற்றுள்ள புராண வரலாற்று சிறப்பு மிக்க மகாமகக் குளத்தில் வருகிற 18-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திர தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது.
விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் குடந்தை கீழ்கோட்டம் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர், ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 8-ந்தேதி அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி மறுநாள் காலை கொடியேற்றமும்.
தொடர்ந்து தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சூரிய, சந்திர பிரபை, சிம்மம், யாளி, கிளி, பூதம், காமதேனு,
சேஷம், அதிகாரநந்தி, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வண்ண மின் விளக்குகள் ஒளிர மங்கள இன்னிசை முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா நடைபெறும்.
விழாவின் 7-ம் நாளான இன்று திருக்கல்யாணமும், 9-ம் நாளான 17-ந்தேதி காலை 8-மணிக்கு மேல் தேரோட்டமும், 10-ம் திருநாளான 18-ந்தேதி காலை 12 மணிக்கு மேல் நாகேஸ்வரர், ஆதிகம்பட்டவிஸ்வநாதர் சிவாலய (பஞ்ச மூர்த்திகள்) சுவாமி-அம்பாள் ரிஷபரூடராய் மகாமககுளக் கரையில் எழுந்தருள அஸ்திரதேவமூர்த்தி தீர்த்தவாரி கண்டருளும் விழாவும்.அதே நேரம் கொட்டையூர்- கோடீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி விழா காவிரி கரையிலும் நடைபெறவுள்ளது.
அன்று இரவு மகாமக குளத்தில் இருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந்தேதி இரவு ஸப்தாவர்ணம் நடைபெறும். சப்தாவர்ணம் சிறப்பு சுவாமி, அம்பாள் கோவிலை 6 முறையும், ரத வீதியில் ஒரு முறையும் சுற்றி வருவார்கள். இந்த ஸப்தாவர்ணம் (ஏழு) சுற்றுக்களில் சுவாமிக்கு நடைபெறும் உபசாரங்கள் ஆகமம், வேதம், திருமுறை, நாதஸ்வரம், நாட்டியம், மௌனம், கட்டியம் கூறல் என வகைப்படும்.
20-ம் தேதி இரவு விடையாற்றி விழாவில் சுவாமி அம்பாள் வீதியுலாவும், மறுநாள் இரவு
ஊஞ்சல் உத்ஸவ சாந்தி பூஜையும் நடைபெறும். விழாக் காலங்களில் தினசரி மங்கல இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், திருமுறை மற்றும் பலவித சிறப்பு நிகழ்ச்சிகள் கோவில்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆதிகும்பேஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தீர்த்தவாரி வருகிற 18-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் மகாமக குளத்தில் தெப்பத்தில் வண்ண மின் விளக்குகள் ஒளிர மங்கள வாத்தியங்கள் இசைக்க ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் எழுந்தருள் பாலிக்கும் மலையரசியான மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை, கலையரசி, அலையரசியுடன் எழுந்தருள தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
சாரங்கபாணி கோவிலில் கோமளவல்லித் தாயார் பங்குனி உத்திர தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாண மகோத்ஸவ விழா சாரங்கபாணி கோவிலில் எழுந்தருளியுள்ள கோமளவல்லித் தாயாருக்கு பங்குனி உத்திர தீர்த்தவாரி பிரம்மோற்சவ விழா கடந்த 9-ந்தேதி அன்று அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறும்,
விழாவினையொட்டி கோமளவல்லித் தாயார் தினசரி சிறப்பு அலங்காரத்துடன் கமல, சேஷ, கருட, யானை, அன்ன, யாளி, சிம்ம வாகனங்களில் எழுந்தருள உட்பிரகார புறப்பாடும், தொடர்ந்து 18-ம் தேதி காலை 8 மணிக்கு மேல் ரதாரோஹணமும், 12 -மணிக்கு தீர்த்தவாரி உத்ஸவமும், 19-ந்தேதி சப்தாவர்ண விழாவும் தொடர்ந்து 20-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாண மஹோத்ஸவமும், 21, 22, 23, 24 ஆகிய தினங்கள் விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.
அம்புஜவல்லி தாயார் சமேத ஆதிவராஹப் பெருமாள் எழுந்தருளியுள்ள இக்கோவிலில் பங்குனி உத்திர விழாவினையொட்டி நாளை மாலை திருக்கல்யாண உத்ஸவமும், 17- ம் தேதி ஆதிவராஹப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காலை யாளி வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் வீதியுலாவும், 18-ம் தேதி இரவு தாயாருடன் பெருமாள் எழுந்தருள வராஹ புஷ்கரணியில் தெப்போத்ஸவமும். இவ்வாலயத்தில் 3 நாள் விழாவாக நடைபெற உள்ளது.
பங்குனி உத்திர தீர்த்தவாரி மகோத்ஸவத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, திருக்கல்யாண வைபவம், தெப்போத்ஸவம் ஆகிய இம் மூன்று விழாவையும் காண இறையின் நிறையருளுடன் பிணிகள் யாவும் நீங்கி வளங்கள் வளரும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை அந்தந்த கோவில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.