மன்னர் சரபோஜி கல்லூரியில் நடந்த விழாவில் ஆணையர் சரவணகுமார் கவுரவிக்கப்பட்டார். 
உள்ளூர் செய்திகள்

நம் வாழ்க்கையை நம் செய்கைகள் அழகுப்படுத்த வேண்டும்

நம் வாழ்க்கையை நம் செய்கைகள் அழகுப்படுத்த வேண்டும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பேசியுள்ளார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சாலைப் பயணம் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதற்கு வரலாற்றுத்துறை தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பேசியதாவது:-

சாலை பாதுகாப்பு என்பது நம் உயிர் பாதுகாப்பு மட்டுமல்ல. ஒரு தலைமுறையின் கனவு பாதுகாப்பு. நம் வாழ்க்கையை நம் செய்கைகள் அழகுபடுத்த வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சீர்குலைக்கமலாவது இருக்க வேண்டும். மாணவர்கள் தம் தலை அலங்காரத்தில் தொடங்கி உடை அணியும் விதம், சாலையில் வாகனங்கள் ஓட்டும் விதம் அனைத்திலும் நேர்த்தி வேண்டும். வாகனம் ஓட்டுவது ஒரு அழகான கலையாகவும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் எந்த ஒரு சிக்கலும் தராத வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசும்போது, அனைத்து மாணவர்களும் உரிமம் எடுப்பதற்கு வசதியாக ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், நிர்வாகத்தினர், மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டாளர் புகழேந்தி நன்றி கூறினார்.