மைக்கேல்பட்டி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் விசாரணை. 
உள்ளூர் செய்திகள்

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை

மைக்கேல்பட்டி பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

மாலை மலர்

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்தார். 

இது தொடர்பாக விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கணுங்கோ, கல்வி ஆலோசகர்கள் மதுலிகாசர்மா, கட்யானி ஆனந்த் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். 

பள்ளி பதிவேடுகள், விடுதி பதிவேடுகளை ஆய்வு செய்தனர். 

பதிவேடுகளை கைபேசியில் படம் எடுத்துகொண்டனர். 

விடுதியில் தங்கி படிப்பவர் விவரம், அவர்களுக்கான உணவு செலவுகள், விடுதி உரிமம் குறித்து கேள்விகள் கேட்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி, பள்ளி சார்பில் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் வந்திருந்த குழுவினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தனர். 

பின்னர் லாவண்யா தங்கியிருந்த விடுதியை ஆணைய தலைவர் பிரியங்கா கணுங்கோ பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஒன்றரை மணி நேரம் ஆய்வு முடித்து கொண்டு சென்றனர். பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடைபெறக்கூடும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

பெற்றோர்களும் பள்ளிக்குள் கூடியிருந்தனர். பள்ளிக்கு வெளியிலும் கிராம மக்கள் கூடியிருந்தனர்.

சீருடையில் வந்த மாணவிகள் குழுவினர் ஆய்வை முடித்து விட்டு சென்ற பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆய்வின்போது தஞ்சைமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜ், துணை கலெக்டர் சுகபுத்ரா, பூதலூர் தாசில்தார் பிரேமா ஆகியோர் உடனிருந்தனர். 

தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் உடன் வந்தனர். ஆய்வுக்குழு மைக்கேல்பட்டி பள்ளிக்கு வருவதை முன்னிட்டு தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.