தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி
தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த அரியலூர்
மாணவி லாவண்யா (வயது 17) விஷம் குடித்து தற்கொலை
செய்து கொண்டார்.
பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்ய கூறி வார்டன்
வற்புறுத்தியதால் லாவண்யா விஷம் குடித்ததாக
திருக்காட்டுப்பள்ளி போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் வார்டன் சகாயமேரி (62) கைது செய்யப்பட்டார்.
ஆனால் மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தான் லாவண்யா
தற்கொலை செய்தார் என கூறி பா.ஜ.க.வினர் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இப்படி மாணவி மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள்
தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள்
பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய
தலைவர் பிரியங்கா கனூப் தலைமையில் அதிகாரிகள்
டாக்டர் ஆனந்த், மதுலிகாசர்மா, கத்யாஜினி ஆனந்த் ஆகியோர்
அடங்கிய 4 பேர் குழு தஞ்சை வந்தனர்.
இதையடுத்து அவர்கள் இன்று காலை தஞ்சை ரெயில்வே
அதிகாரிகள் ஓய்வு அறைக்கு சென்றனர்.
அங்கு மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தும்
விசாரணை அதிகாரியும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான
பிருந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா,
மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேலு, கூடுதல் கலெக்டர்
சுகபுத்ரா மற்றும் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள்
ஆஜராகினர்.
இவர்களிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அதிகாரிகள்
தனி தனியாக விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலைக்கு என்ன காரணம்? எந்த முறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?
வாக்குமூல விவரம், இதற்கு முன்னர் அந்த பள்ளியில் ஏதாவது
பிரச்சினை நடந்துள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்
குறித்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவல்களை அறிக்கையாக தயார் செய்து
கொண்டனர். 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தஞ்சையில் இருந்து புறப்பட்டு மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளிக்கு சென்றனர்.
அங்கு லாவண்யாவுடன் படித்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
பின்னர் மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம்
வடுகபாளையத்துக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை
நடத்த உள்ளனர்.