பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சேது சாலையில், ரயில்வே கேட்டைத் தாண்டி, பூக்கொல்லை செல்லும் வழியில், பழைய பஸ் நிலையம் முன்பாக சாலையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளது.
மேலும், கனரக வாகனங்கள், காரில் செல்லும்போது பள்ளத்தில் ஏறி சாலை வேகத்தடையை கடக்க முற்படுகையில், வாகனங்கள் இயங்க முடியாத அளவுக்கு, அடிப்பாகம், பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது.
இதனால் பின்னால் வரும் வாகனங்கள், நிற்கும் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தேங்காய் கொப்பரைகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனை அப்புறப்படுத்த முடியாமல் ஓட்டுநர் தவித்தார்.
இதனால் சாலை இருபுறமும் வாகனங்கள் தேங்கின. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பள்ளத்தில் மாட்டிக் கொண்ட லாரியில் இருந்த சரக்குகள் கடும் சிரமத்துக்கு இடையே அகற்றப்பட்டு, பின்னர் லாரி மெதுவாக அப்புறப்படுத்தப்பட்டது.
எனவே முக்கியத்துவம் வாய்ந்த முசிறி-சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் உள்ள, இந்த சாலைப் பள்ளத்தை சீரமைக்காமல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது, வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளத்தை சீரமைத்து, உயரமாக உள்ள வேகத்தடையை சமன் செய்து சாலையை மேம்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.