அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த தாய், குழந்தை இறந்தனர். 
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த தாய், குழந்தை இறப்பு

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த தாய், குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்ததாக கணவர் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகரில் உள்ள நரியம் பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் ராஜா வயது (29). இவர் இன்ஜினீயரிங் படித்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். தற்சமயம் ஊரில் உள்ளார். இவருடைய மனைவி வைஜெயந்தி (28). வைஜெயந்தி கர்ப்பமான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 24 ந்தேதி வைஜயந்திக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜா மற்றும் உறவினர்கள், வைஜெயந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவ பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு சேர்த்த சிறிது நேரத்தில் ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து வைஜயந்தி உடல்நிலை மோசமான நிலையில் வைஜயந்திக்கு மருத்து வர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மதியம் மருத்துவமனை நிர்வாகத்தினர், உடனடியாக வைஜயந்தியை தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இதயத் துடிப்பு குறைந்து விட்ட நிலையில் வைஜயந்தி தஞ்சாவூர் அரசு மிராசுதார் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடல் நிலை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், நாடித்துடிப்பு குறைந்து உள்ளதாகவும் கூறி சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் வைஜயந்தி 2 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வைஜயந்தியின் கணவர் ராஜா பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே தனது மனைவியும், குழந்தையும் இறந்துள்ளனர். சரியான முறையில் சிகிச்சை அளிக்க தவறிய அரசு மருத்துவமனை நிர்வாகம் மீதும் தங்களை அலட்சியமாகப் பேசி விமர்சனம் செய்த நர்சுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.