கல்லணை கால்வாயில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 
உள்ளூர் செய்திகள்

கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

பூதலூர் பகுதியில் கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

மாலை மலர்

பூதலூர்:

காவிரி டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தும் கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய (புதுஆறு) பிரிந்து பாசனத்திற்கு பயன்பட்டு வருகின்றது.கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வரை முறையாக சென்று பாசனத்திற்கு பயன்படும் வகையில் திறன்மிக்க நீர் மேலாண்மை க்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ2639 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம், புதுப்பித்தல், மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

கடந்த ஆண்டில் பணிகள் தொடங்கின. தொடங்கப்பட்ட பணிகள் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிறுத்தப்பட்டன. நிறுத்தப்பட்ட பணிகள் மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

கல்லணை தொடங்கி நடைபெற்றுவரும் பணிகளில் ஆற்றின் நீர் ஓடும் பாதைகளில் கான்கிரீட் தளம் அமைத்தல, சைபன் எனப்படும் கீழ் பாலங்களை புனரமைத்தல, கரைகளில் கான்கிரீட்சாய் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லணையிலிருந்து பூதலூர் நீர்வள ஆதாரத்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ200 கோடி மதிப்பில் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 கல்லணை கால்வாய் தலைப்பிலிருந்து கால்வாயில் படுக்கை தளம் அமைக்கும் பணிகள், ஒவ்வொரு பகுதியாக நவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு அதில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தளம் அமைக்க வேண்டிய பகுதிகளில் ராட்சத இயந்திரங்கள் மூலம் மண் மேடுகள் அகற்றப்பட்டு, சமப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த பகுதிகளில் உள்ள கீழ் போக்கு பாலங்களில் வலுப்படுத்தும் பணிகளையும் அதற்கென உள்ள தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய் நெடுகிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும், அதற்கான கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் லாரிகள் குறுக்கும் நெடுக்கும் சென்று கொண்டிருக்கின்றன.

கல்லணை கால்வாயில் தண்ணீர் ஓடும் பகுதிகளில மண்தளத்தை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வாய்ப்பு உள்ளது. ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, ஜூன் 16 கல்லணையில் இருந்து டெல்டா பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும் போது செய்யப்படும் பணிகளை நிறுத்தி செய்து அடுத்த ஆண்டில் மீண்டும் தொடர்வதற்கு ஏதுவாக பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.