பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவ தலமான அக்னீஸ்வரர் கோவிலில் 10 நாள் பங்குனி உத்திர விழா துவஜாரோகணம் என்னும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்டு கொடிமரத்தின் முன்னே எழுந்தருளப்பட்டது.
கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கொடிமரத்தினை சுற்றிலும் தர்ப்பை கொண்டு சுற்றி கட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க துவஜாரோகணம் என்னும் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடைபெறும்.
பங்குனி உத்திர நாளான வரும் 18&ந்தேதி காலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலா, தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் காவிரி ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். காவிரி ஆற்றில் பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு இரவு இசை நிகழ்ச்சிகளும் வான வேடிக்கைகளும் நடைபெறும்.
கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்குனி உத்திர விழாக்குழு தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராஜேஸ்வரன் மற்றும் விழா குழுவினர்.முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், கோவில் செயல் அலுவலர் சுதா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.