வழிகாட்டி பலகை. 
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் வழிகாட்டி பலகையில் 28 நாடுகளின் திசை, தூரம்

தஞ்சை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மக்களை கவரும் வகையில் 28 நாடுகளின் திசை, தூரம் குறித்து வைத்துள்ள வழிகாட்டி பலகை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள உறந்தைராயன்குடிகாட்டை சேர்ந்தவர் மாமல்லன் (வயது 44). இவர் அதே பகுதியில் பெட்ரோல் பங்க், டீக்கடை நடத்தி வருகிறார். 

முன்னதாக இவர் சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு சொந்த ஊரில் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு பார்த்த வேலையை உதறிவிட்டு வந்தார்.

தான் வைத்துள்ள பெட்ரோல் பங்கு முன்பு சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் வைத்துள்ளார். கிராம மக்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு விழிப்புணர்வு செயல் செய்ய வேண்டும் என்று எண்ணினார். 

அப்போது அவரது மனதில் உதித்த எண்ணம்தான் வெளிநாடுக்கு செல்வது எப்படி என்பது குறித்த வழிகாட்டி பலகை. 

உலகில் உள்ள முக்கிய நாடுகள் எந்தெந்த பகுதிகளில் இருக்கின்றன,  இங்கிருந்து எத்தனை கிலோமீட்டர், எத்தனை மைல் தொலைவில் அந்த நாடு உள்ளது போன்ற விவரங்களை பெட்ரோல் பங்கு முன்பு வழிகாட்டி பலகையாக வைத்துள்ளார். 

அதாவது ஜி.பி.எஸ் கருவி மூலம் நாட்டின் திசை பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூர், மலேசியா ,ஹாங்காங், தைவான், தாய்லாந்து, சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா ,அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 28 நாடுகள் உடைய பெயருடன் கூடிய  பலகையை வைத்துள்ளார். 

இதுகுறித்து மாமல்லன் கூறும்போது:&

தங்கள் பகுதியில் உள்ளவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். வேலை பார்ப்பவர்கள் அந்த நாடு எங்கு உள்ளது என்பது அவர்களுக்கு தெரியாது . கிழக்கே உள்ள நாட்டிற்கு வேறுதிசை காட்டுவார்கள். தங்கள் மகன், தங்களது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள், துபாயில் வேலை பார்க்கிறார்கள் என கூறும் இவர்கள் அந்த திசையை மாற்றி  கூறுவார்கள். 

அவர்கள் இந்த வழிகாட்டி பலகையை பார்த்ததால் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.மேலும் பலருக்கும் எந்த நாடு எந்த திசையில் உள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது தெரியாமலேயே உள்ளனர். 

அவர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பலகையை வைத்து உள்ளேன் என்றார்.

மாமல்லனின் இந்த செயல் பலரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.