குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். 
உள்ளூர் செய்திகள்

குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

வல்லத்தில் குடற்புழு நீக்க சிறப்பு முகாமை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்

வல்லம்:

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரம் 2022-ம் ஆண்டுக்கான அல்பெண்டசோல் 

மாத்திரை வழங்கும் முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடு தழுவிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, 1 வயது குழந்தை முதல் 

19 வயது வரை உள்ளவர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) வருகிற 19-ந்தேதி வரை (செவ்வாய், புதன், ஞாயிறு நீங்கலாக) முதல் 

சுற்றும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 

21-ந்தேதியும் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், 

தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அங்கன்வாடி மையங்கள் 

ஆகியவற்றில் இம்முகாம் நடைபெறுகிறது.

இதில் 6,55,306 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் என மொத்தம் ஏறத்தாழ 2 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 

குடற்புழுத் தொற்றால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, 

சோர்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, 

வயிற்று வலி,  வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

குடற்புழு நீக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு ரத்த சோகை தடுத்தல், 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் 

வளர்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், 

நகர நல அலுவலர் நமச்சிவாயம், உதவி இயக்குனர் ஊராட்சிகள் 

மோகன், வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன், 

பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி, பேரூராட்சி உறுப்பினர்கள் அன்பழகன், சத்யா, 

பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஆண்கள் 

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி மற்றும் 

பலர் உடன் இருந்தனர்.