பூதலூர்:
தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட மையங்களில் 11 லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வு கூடத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுபோல தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து பார்த்த போது தேர்வாளர்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்பட்டது. நான்கு பக்கங்களைக் கொண்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் முதற்பக்கத்தில் முற்றிலும் தமிழில் தமிழக அரசு வாய்மையே வெல்லும் என்று சின்னம் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று தமிழில் எழுதப்பட்டு, அதன் கீழ் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது
விண்ணப்பதாரர் பெயர், பதிவு எண், விண்ணப்ப எண், தந்தை பெயர், விண்ணப்பதாரரின் முகவரி, தேர்வு மையம், தேர்வு கூடத்தின் பெயர் மற்றும் முகவரி தேர்வுநாள் மற்றும் நேரம் ஆகியவை தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் விண்ணப்பதாரரின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. முகவரியும் ஆங்கிலத்தில் உள்ளது.
தேர்வு மையம், தேர்வுக் கூடத்தின் பெயர் மற்றும் முகவரி ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.தமிழ் இல்லை. அதேபோல இதில் கையொப்பமிட்டு உள்ள அதிகாரியின் கையெழுத்தும் அழகான ஆங்கிலத்தில் உள்ளது. முதல் பக்கத்தில் தமிழ் ஆங்காங்கே தென்படுகின்ற நிலையில் மற்ற மூன்று பக்கங்களிலும் முழுவதுமாக ஆங்கிலத்திலேயேதேர்வர்க ளுக்கான விளக்கக் குறிப்புகள் காணப்படுகின்றன.
தேர்வாணைய தேர்வில் பொதுத் தமிழ் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலையில் தமிழக அரசின் தேர்வாணைய அனுமதி சீட்டில் தமிழில் விளக்கக் குறிப்புகள் இல்லாதது வேதனை அளிப்பதாகவும், அடுத்து வரும் தேர்வுகளின் போது தேர்வுகூட அனுமதிசீட்டு, தேர்வர்களுக்கான விளக்கம் தமிழில் தரப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.