தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் இர்வின்பாலம், கரந்தை வடவாறு பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இது
தவிர பல இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகின்றன. இதில் ஒரு கடையின் குடோனாக 2400 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வந்த கட்டிடத்தை சாலை விரிவாக்கத்துக்காக இடிக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
இது தொடர்பாக அந்த கடை நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் மகன் குடோன் கட்டிடத்தை இடித்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5 கோடி என்பது குறிப்பிடதக்கது.