வேப்பங்குளத்தில் தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி 
உள்ளூர் செய்திகள்

தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

வேப்பங்குளத்தில் தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பட்டியல் இன தென்னை விவசாயிகளின் மேம்பாட்டிற்கான தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

இதில் முனைவர் பாபு மேற்பார்வையில் உதவி பேராசிரியர்கள் அருண்குமார், சுருளிராஜன் மற்றும் வள்ளிநாயகம் உதவியுடன் தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஈச்சங்கோட்டை மாணவிகளான மோனிஷா, பனிமலர், பால ஸ்ரீ வைஷ்மா மதுமதி, நந்தினி, நர்மதா, நிவேதா ஜோதிர்மை, லாவண்யா, கவிதா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலைக்கான விதை நேர்த்தி முறை பற்றியும், தென்னையில் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறை, வளர்ச்சி ஊக்கிகள், நெல் மற்றும் தென்னை வல்லுனர் அமைப்பு செயலி, டி.என்.ஏ.யூ. தென்னை டானிக் பற்றியும் அதற்கான பயன்பாடு மற்றும் மேலாண்மை முறைகளுக்கான விளக்கப்படங்களை காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் விதை நேர்த்தி முறையில் பயன்படுத்தும் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பேசில்லஸ் மற்றும் பூச்சிக்கொல்லி போரேட் மற்றும் பூஞ்சாணக் கொல்லி கார்பன்டசிம், தென்னையில் மரநாய் கட்டுப்படுத்த இரும்பு டின், காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த வலை, அந்துருண்டையும் வேப்பங்கொட்டை தூளும், தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த வேரூட்டம் மூலம் ஹெக்சகோனசோல், நிலக்கடலை ரிச் மற்றும் தென்னை, நெல், பயறு வகை, நிலக்கடலை காண நுண்ணூட்ட கலவைகளும் கண்காட்சியில் விழிப்புணர்வுக்காக காண்பிக்கப்பட்டன.

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் கடந்த சில நாட்களாக தென்னையில் பூச்சி கட்டுப்பாடுகள் செய்யும் முறை பற்றியும், நெல் நிலக்கடலை விதை விதை நேர்த்தி செய்யும் முறையைப் பற்றியும் செயல் விளக்கங்களுடன் செய்து காண்பித்து வருகின்றனர். இதில் விவசாயிகள் 30 பேர் கலந்து கலந்துகொண்டு பயன் பெற்றனர்.