கைது செய்யப்பட்ட 14 பேர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்கள் 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை வழியே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பு 250 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பு 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக  இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவுப்படி தஞ்சை சரக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது. அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த லாரியை வழிமறித்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 

அதில் 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து லாரியில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மூட்டைகள் நாகப்பட்டினம் வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் 3 குழுவாக பிரிந்து ஆங்காங்கே காரில் கஞ்சா மூட்டைகள் கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் படி மாவட்டம் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் முத்துப்பேட்டை உள்ளிட்ட 3 இடங்களில் 3 கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்தனர்.

மொத்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஒரு லாரி, 3 கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கஞ்சா கடத்த முயன்றதாக சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் (29), ஆந்திர மாநிலத்தை  சேர்ந்த சீனிவாசா(30), கணபதி, நாகராஜ், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த முருகன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ராஜா உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT