ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன் செய் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்க விழா நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன் செய் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தஞ்சையில் ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன் செய் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் தொடங்கியது.

தஞ்சாவூர்:

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் அமைச்சர் பசுபதிகுமார் பராஸ், தஞ்சாவூரில், ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன் செய் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை துவங்கி வைத்தார்

மற்றும் மகளிர் தின சிறப்பு விழிப்புணர்வு பயிற்சியை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் மாண்புமிகு மாநிங்களவை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் துவங்கி வைத்தார் 

தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் தஞ்சாவூர், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய, அதன் வளாகத்தில் வெப்பம் சாரா உணவு பதன் செய் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது, 

இது ஆசியாவின் முதல் மேம்பட்ட ஆராய்ச்சி வசதியாகும். இந்த மையத்தில் உலகத்தர ஆராய்ச்சி வசதிகளான கதிரியக்க தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அடங்கிய ஆராய்ச்சி வசதிகள் நிறுவப்பட்டுள்ளது.  உணவு பொருட்களின் தரம் மற்றும் ஆயுட்காலத்தை வெப்பம் சாரா தொழில் நுட்பத்தின் மூலம் அதிகரிப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். கூடுதலாக, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஆதரவுடன், இந்த சிறப்பு மையத்தில் உணவு கதிர்வீச்சு அலகும் அமைக்கப்படும். மேலும், வெப்பம் சாரா தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை இந்த மையம் அளிக்கும்.

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சர்பசுபதி குமார் பராஸ் இந்த மையத்தையும் புதிதாக கட்டப்பட்ட நிறுவனத்தின் நுழைவு வளைவையும் திறந்து வைத்தார். அமைச்சர் தனது உரையில், இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகளை தமிழ்நாட்டில் திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மையம் மேம்பட்ட உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி சார்ந்த மேம்பாட்டை ஊக்குவிக்கும், மேலும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி பணிகளுக்கும் வணிக மயமாக்கலுக்கும் வழி வகுக்கும். ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் மேம்பட்ட உணவு பதப்படுத்தும் அணுகுமுறைகள் பயிற்சியையும் அளிக்கும் என்று கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான பிரதமர் உணவு நுண் நிறுவனங்களை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்தது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறையின் மாநிங்களவை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.  

பயிற்சியில், திட்ட வழிகாட்டுதல்கள், மானிய- உதவி ஏற்பாடுகள், விதிமுறைகள், பேக்கேஜிங் தொழில்நுட்பம், மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டன. 

தஞ்சாவூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து சுமார் 250 பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, இயக்குநர் டாக்டர் சி.ஆனந்தராமகிருஷ்ணன் வரவேற்றார். இயக்குனர் தனது உரையில், நிறுவனத்தின் வசதிகளைப் பயன்படுத்த தொழில்துறை பங்குதாரர்கள், உறுப்பினர்களை கேட்டுக்கொணடார்.

சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்குவதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சியையும் இம் மையம் அளிக்கும் என கூறினார். உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் இணை செயலர் மின்ஹாஜ் ஆலம் நன்றி கூறினார்.