கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு

நிதிபற்றாக்குறையில் இருக்கும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு, அரண்மனை தேவஸ்தானம் நன்றி தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 கோவில்களை கொண்டுள்ள முதுநிலை தேவஸ்தானமாகும். இதில் பாடல் பெற்ற தலங்கள், பிராத்தனை தலங்கள், மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள், சக்தி தலங்கள், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பராம்பரிய சின்ளமாக அறிவிக்கப்பட்டவை போன்ற பல கோவில்கள் உள்ளன.

இந்த தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே வரக்கூடியதாக உள்ளது. முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சை பெருவுடையார் கோவில் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்களின் வருவாயை கொண்டே இதர கோயில் நிர்வாகத்தையும் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் அரசு நிதியுதவிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று அறநிலையத் துறையின் 2022-2023-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை எண் 47-ன் அறிவிப்பின் படி நிதிபற்றாக்குறையில் இருக்கும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இத்தேவஸ்தானத்திற்கு தற்போது இருந்து வரும் நிதி பற்றாக்குறையை போக்குவதோடு வருங்காலத்தில் தேவஸ்தான கோயில்கள் வளமான நிர்வாகத்தை நோக்கி பயணிப்பதற்கு உறுதுணையாய் இருக்கும்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தலைமை செயலாளர், அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.