தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:--&
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.
மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும். மேலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் முடிவுற்ற பின்னர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுய தொழில் திட்டங்கள் குறித்தும், அது தொடர்பான மானியங்கள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளனர்.
எனவே இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.