ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). இவரது தம்பி உதயகுமார் (26). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி சுமதியும் 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
செல்வகுமாரும், உதயகுமாரும் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றனர். கிணற்றில் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக செல்வகுமார் கிணற்றில் தவறி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த தம்பி உதயகுமார் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
செல்வகுமார் கிணற்றில் தத்தளித்தவாறு மேலே ஏறினார். ஆனால் அவரை காப்பாற்ற முயன்ற உதயகுமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உதயகுமாரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.