மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 65) இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
ஏகாம்பரம் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது எரிய தொடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியவில்லை.
அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாட சாமான்கள், மின் சாதனங்கள், கட்டில் பீரோ, புடவை என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.