முருகன்-நாச்சியார். 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

செங்கோட்டை அருகே திருமலாபுரத்தில் தொழிலாளி கொலையில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்ததால் கொலை செய்ததாக அவர் போலீசில் தெரிவித்தார்.

மாலை மலர்

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள  திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 40). இவருக்கு நாச்சியார்(36) என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கட்டிட தொழிலாளியான முருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துவந்தது. நேற்று முன்தினம் முருகன் தனது வீட்டுக்கு கள்ளக்காதலியை அழைத்துவந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் நாச்சியார் கோபம் அடைந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து முருகனின் முகத்தில் வீசினார். பின்னர் அங்கு கிடந்த கம்பால் முருகனை தாக்கி கொலை செய்தார்.

இதுதொடர்பாக செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து நாச்சியாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:

எனது கணவர் எனக்கு முறை பையன். நாங்கள் 20 வருடமாக சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் எனது கணவர் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். நான் எவ்வளவோ கண்டித்தும் கேட்கவில்லை.

நேற்று முன்தினம் எனது வீட்டுக்கே அந்த பெண்ணை அழைத்துவந்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் நான் அவரை மிளகாய் பொடி தூவி கம்பால் அடித்து கொலை செய்துவிட்டேன். ஏதோ ஆத்திரத்தில் நடந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லை  மகளிர் சிறையில் அடைத்தனர்.