லாரி உரசியதில் மின்கம்பம் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூரில் உமி மூட்டை ஏற்றி வந்த லாரி உரசி மின்கம்பம் சேதம்

கீழப்பாவூரில் உமி மூட்டை ஏற்றி வந்த லாரி உரசி மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீ.கே.புதூர்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் இருந்து நெல்லை - தென்காசி சாலைக்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு அந்த வழியாக  அளவுக்கு அதிகமாக உமி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று  உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இரும்பு  கம்பத்தில்  உரசியது. இதனால்  அந்த மின் கம்பம் சாய்ந்தது.

உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அதில் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர்.  இதனால் கீழப்பாவூர் ஊரில் பல இடங்களில் மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டது.

பின்னர் கீழப்பாவூருக்கு செல்லும் மின் வினியோகத்தை சீர் செய்தனர். ஆனால் இந்த லாரி அந்த இடத்தை விட்டு அகற்றப்படாமலும், மின் கம்பம் சரி செய்யப்படாமலும் உள்ளது.

 இதனால் அந்த சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.  உடனடியாக அந்த லாரியை அகற்றி மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.