தென்காசி முக்கூடல் பாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வரும் காட்சி. 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை-தென்காசி சாலையில் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

செங்கோட்டை-தென்காசி சாலையில் ஒரு ஆண்டாக கட்டப்பட்டு வரும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

செங்கோட்டை:

தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் மெயின் ரோட்டில் உப மின்நிலையம் அருகில் அரிகராநதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தென்காசி - இலஞ்சி இடையே போக்கு வரத்து தடை செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

செங்கோட்டையிலிருந்து இலஞ்சி வழியாக தென்காசிக்கு 8 கி.மீ., தூரத்தில் செல்ல வேண்டியதை, குற்றாலம் வழியாகவோ அல்லது இலஞ்சி, குத்துக் கல்வலசை வழியாக வோ செல்ல வேண்டுமானால், கூடுதலாக 5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந் துள்ளனர்.

முக்கூடல் பழைய பாலம் இடிக்கப்பட்டு இலஞ்சி தென்காசி இணைப்பு பாலம் 12 மாதங்கள் ஆகியும் பாதிப்பணிகள் கூட முடியாத நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால்  தென்காசி- செங்கோட்டை செல்லும் பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

  தற்போது புதிய பாலம் கட்டும் பணியில் இருபுறமும் முழுமையாக பணிகள் முடிவடைந்துவிட்டன. மையப்பகுதியில் மட்டும் இணைப்பு பணியான இணைப்பு மேல்தளம் பணிகள் நடைபெற வேண்டி உள்ளன. 

 எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன்கருதி பாலப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறையினர் போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.