கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

சாம்பவர்வடகரையில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்-மில் உரிமையாளர் கைது

சாம்பவர்வடகரையில் லோடு வேனில் 3 டன் ரேசன் அரிசி கடத்திய மில் உரிமையாளரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில் நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து  சென்றனர்.

அவர்களுடன் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது விந்தன்கோட்டை சாலையில் வந்த மினி லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.  அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து ரேசன் அரிசியை லோடு வேனுடன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக மினி லோடு வேனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்த மனோ ஜெபத்துரை(வயது 30) என்பதும், அந்த பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருப்பதும் தெரியவந்தது. 

அவரை போலீசார் கைது செய்தனர். பிடிப்பட்ட ரேசன் அரிசி எடை 3 டன் ஆகும்.