கடையநல்லூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் ரம்ஜான் கொண்டாட்டம்-தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மாலை மலர்

கடையநல்லூர்:

ரமலான் பிறை 30 நாட்கள்  முடிந்ததை  அடுத்து  கடையநல்லூரில்  தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் ரம்ஜான் தொழுகை திடல்களில்  நடத்தப்பட்டது. இதில் காயிதே மில்லத் திடல்  முழுவதும் நிறைந்தது. 

அதன் பின்னர் அருகே உள்ள  பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர்.  இதில்  அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும்  தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில செயலாளர் முகம்மது ஒலி   தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை  நடத்தினார்.

இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.  

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், செய்ப்பு மைதீன், சம்சுதீன், செய்யது மசூது, துராப்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் ஜாபர்,அப்துல் அஜீஸ்,மர்வான் தலைமை யிலான தொண்டரணியினர் செய்து இருந்தனர். இது போன்று பேட்டை கிளை சார்பில் நகரில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இந்த  தொழுகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம்  சார்பில்   தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், திரிகூடபுரம்  உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும்  30-க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடை பெற்றது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை  கடைய நல்லூர்  தாசில்தார் அரவிந்த்  மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சப்-இன்ஸ்பெக்டர் கனக ராஜ்  ஆகியோர்  செய்து இருந்தனர்.

தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. 

அதன் பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதிய, பழைய பேருந்து நிலையம், மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் தினசரி மார்க்கெட்  பகுதிகளில் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.