கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி-மணியாச்சி இடையே தண்டவாளம் அடித்தளம் வலுப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும்-ஆர்.டி.ஐ.யில் அதிகாரிகள் தகவல்

கோவில்பட்டி-மணியாச்சி இடையே தண்டவாளம் அடித்தளம் வலுப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும் என ஆர்.டி.ஐ.யில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

வீ. கே. புதூர்:

கோவில்பட்டி- வாஞ்சி மணியாச்சி இடையே நடைபெறும் பழைய இருப்புப்பாதை அடித்தளம் வலுப்படுத்தும் பணிகள் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல்கள் கோரியிருந்தார்.

அதற்கு மதுரை ரெயில்வே கோட்ட மூத்த பொறியாளர் முகைதீன் பிச்சை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

 கோவில்பட்டி-வாஞ்சி மணியாச்சி இடையே 593.3 கிலோமீட்டர் முதல் 604.8 கிலோமீட்டர் வரை இருப்புப்பாதை அடித்தளம்  வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதையில்  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இந்த அடித்தளம் பலப்படுத்தும் பணிகள் விரைவில் நிறைவு பெறும். அதில் எந்த பிரச்சனைகளும் இல்லை. தற்போது உள்ள களிமண் அடித்தளம் முழுமையாக நீக்கப்பட்டு சரள் கற்கள் கொண்டு அடித்தளம் அமைக்கப்படுகிறது. சரள் மண் கிடைப்பதில் எந்த இடர்பாடும் இல்லை.

இந்த அடித்தளம் பலப்படுத்தும் பணிக்காக ரூ.19.23 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வலுப்படுத்தும் பணிகளை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இருந்த நிரந்தர வேக கட்டுப்பாடு 70 கிலோ மீட்டர் ஆகும். அடித்தளம் பலப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பின் மற்ற பகுதிகளை போல வேகம் மாற்றம் செய்யப்படும். 

அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்பு பாதையின் அடித்தளத்தை பலப்படுத்தும் திட்டம் இல்லை. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், கோவில் பட்டி-வாஞ்சி மணியாச்சி இடையே சில இடங்களில் களிமண் அடித்தளம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி ரெயில்களின் வேகம் குறைத்து இயக்கப்பட்டது. 

தற்போது ரெயில் தண்டவாளத்தில் அடித்தளம் பலப்படுத்தும் பணி முடிந்தவுடன் ரெயில்களின் நேரங்கள் அதிகரிக்கப்பட்டு முழுவீச்சுடன் இயக்க முடியும். இதனால் மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறையும் என்றார்.