பள்ளி வளாகத்தில் உள்ள பட்டு போன மரம். 
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே பள்ளி வளாகத்தில் பட்டு போன மரத்தை அகற்றப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்குளம் அருகே பள்ளி வளாகத்தில் உள்ள பட்டு போன மரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை:

ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்டது மருதம்புத்தூர் ஊராட்சி. இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களான புதுப்பட்டி, காசிநாதபுரம், கண்டபட்டி,  உடையாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

 இங்குள்ள மாரியம்மன் கோவில் எதிர்புறத்தில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இதன் பின்னால் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் ஒன்று உள்ளது.

 இந்த கட்டிடத்தின் வளாகத்தில்  பழமையான மரம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த மரம் பட்டுப் போய் அதன் கிளைகள் அவ்வப்போது முறிந்து வளாகத்தில் விழுந்து வருகிறது. ஆனாலும் அந்த சமயங்களில் மாணவர்கள் அந்த பகுதியில் வராத காரணத்தினால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வருகிறது.

எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ள இந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு அந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, மருதம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருக்கு சுமார் இரண்டு மாதங்களாக பல முறை மனு அளித்துள்ளார்.

மனு அளித்த உடன் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வார்கள். ஆனால் அதனை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள் என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பட்டு போன அந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT