சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தென்மலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தென்மலை அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று இருந்தனர்.
தற்போது தமிழக அரசு 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த நகைகளை திரும்ப வழங்கி வருகின்றன.
இதனைப் போன்று இவ்வங்கியில் சிலருக்கு நகைகளை திரும்ப வழங்கியும் பலருக்கு நகைகளை திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததாகவும், ஒருசிலருக்கு நகைக் கடன் தள்ளுபடி ஆகவில்லை என்றும், ஒருசிலருக்கு கணக்கெடுப்பில் விடுபட்டு விட்டதாகவும், ஒரு சிலரை ஒரு வருட வட்டியை கட்டி மீட்டு செல்லுமாறு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கு பணம் வழங்கப்படாமல் அதை பாஸ்புக்கில் கைகளில் வரவு வைத்துள்ளதாகவும், வெளியே உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் சரிபார்த்த போது அதில் பணம் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
வாங்காத பணத்திற்கு ஒரு வருட வட்டியை கட்டுமாறும் வற்புறுத்தியதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்ட பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.