தென்காசி:
ஆயிரப்பேரி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் 2020 மற்றும் 21- ம் ஆண்டு வரவு செலவு அறிக்கை மற்றும் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் சங்கரசுப்பிரமணியன் வாசித்து ஒப்புதல் பெற்றார்.
கூட்டத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் இரவிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது போல் பழைய குற்றாலம் அருவியிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவிலும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசின் திட்டங்கள், ஊட்டச்சத்து மற்றும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 19 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதில் துணைத் தலைவர் ரேவதி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பட்டமுத்து, முத்துலட்சுமி, இசக்கி பாண்டி, முருகசெல்வி, முகமது இப்ராகிம், கால்நடை ஆய்வாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் மதிவாணன், கிராம நிர்வாக அதிகாரி சோபியா, தோட்டக்கலை துறை விஜயசந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆயிரப்பேரி ஊராட்சி உதவியாளர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.