தென்காசி:
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், செயல் அலுவலர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வேண்டும்,
குடிநீர் வசதி வேண்டும், கழிவு நீரோடை, தெருவிளக்கு வசதி உள்ளிட்டவை குறித்து மனு கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு சந்தித்தபோது மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்தால் உடனே நிறைவேற்றித் தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
முதல்வர் தமிழகத்தை முன்னேற்றுவதில் எவ்வளவு ஆர்வமாக செயல்படுகிறார் அதேபோன்று உள்ளாட்சித் துறை அமைச்சரும் வளர்ச்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.
கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் நிதி பெற முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது .
உள்ளாட்சி அமைப்பு களுக்கு வரவேண்டிய நிதி விரைவில் வந்துவிடும். கட்சி மற்றும் ஜாதி, மதங் களுக்கு அப்பாற்பட்டு மேலகரம் பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மேலகரம் பேரூராட்சியின் வளர்ச்சிக்காக உங்களுடன் இணைந்து நானும் பணியாற்றுவேன் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, மேலகரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.